ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள முசிமாஹா கிராமத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு சின்ன பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதன் காரணமாக நான்கு வயதுக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கன்வாடி மையத்தில் இருந்து வீடு திரும்பிய விவசாயி ரஞ்சித் பிரதான் என்பவரின் மகன் பிகில் பிரதான் (4) என்பவர் சிப்ஸ் சாப்பிட அடம் பிடித்துள்ளார்.
தந்தையும் சந்தையில் இருந்து 10 ரூபாய் மதிப்புள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பாக்கெட்டில் இருந்த பொம்மை எதிர்பாராதவிதமாக அவரது வாயில் சிக்கியுள்ளது. அந்தப் பொம்மையைச் சவைக்க முயன்றபோது, அது குழந்தையின் தொண்டைக்குள் அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நிலைமையைப் புரிந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள் பொம்மையை வெளியே எடுக்கப் பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனின்றி, குழந்தை மயக்கமடைந்தது.
மயக்கமடைந்த பிகில் பிரதானை உடனடியாக தாரிங்பாடி சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றபோது, குழந்தையை மருத்துவக் குழுவினர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்துப் பேசிய மருத்துவ அதிகாரி ஜைகேஷ் சாமந்தாரா, “பிளாஸ்டிக் பொம்மை குழந்தையின் சுவாசக்குழாயை முழுவதுமாக அடைத்துக்கொண்டதால், மூச்சுவிட முடியாமல் உயிர் பிரிந்துள்ளது” என்று விளக்கினார்.
குழந்தைகள் இதுபோன்ற பொம்மைகளை சாப்பிடக்கூடியப் பொருள் எனத் தவறாக எண்ணுவதால், உணவுப் பொருட்களுடன் இதுபோன்ற பரிசுப் பொருட்களை வைப்பதைத் தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மருத்துவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), பொட்டலமிடப்பட்ட நொறுக்குத் தீனிகளைச் சீரான முறையில் கண்காணிக்கவும், பொம்மைகளைத் தடை செய்யவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்ற மருத்துவர்களும் வலியுறுத்தியுள்ளனர். பெற்றோரின் மறுப்பு காரணமாகப் பிரேதப் பரிசோதனை நடத்தப்படாவிட்டாலும், குழந்தையின் மரணத்திற்கான காரணம் மூச்சுத் திணறலே என்று சூழ்நிலை ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன.
