திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி அருகே உள்ள விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவசக்தியின் மனைவி லாவண்யா (25) என்பவர், ஆன்லைன் வேலை மோசடியில் சிக்கி தான் இழந்த பணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த லாவண்யா, சிவசக்தியை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் மகனும், இரண்டு வயதில் மகளும் உள்ளனர்.
வீட்டில் இருந்தபடியே அஞ்சல்வழிக் கல்வி மூலம் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த லாவண்யா, வேலை தேடும் முயற்சியில் சமூக வலைதளங்களில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களைப் பார்த்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த மர்ம நபர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் வேலைக்குச் சேரப் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை நம்பி லாவண்யா பல தவணைகளாக ₹5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.
ஆனால், வேலை கிடைக்காமல், மர்ம நபர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லாவண்யா, கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், சிவசக்தி வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் குழந்தைகளுடன் இருந்த லாவண்யா திடீரெனத் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குழந்தைகளின் அழுகுரல் கேட்டு விரைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து லாவண்யாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆவதால், பழனி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
