கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த விஜய் (40) மற்றும் அவரது மனைவி ஷ்ரவ்யா (35) ஆகிய இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்த நிலையில், திருமணமாகி நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாத நிலையில், இரட்டைக் குழந்தைகள் கருவிலேயே இறந்த அதிர்ச்சியில் ஷ்ரவ்யா உயிரிழந்ததோடு, இந்தத் துயரத்தால் கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த விஜய் – ஷ்ரவ்யா தம்பதியினர், குழந்தை வரம் வேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஐவிஎஃப் (IVF) சிகிச்சை மூலம் ஷ்ரவ்யா கர்ப்பமடைந்ததோடு, ஸ்கேன் பரிசோதனையில் இரட்டைக் குழந்தைகள் கருவில் உருவானது தெரியவந்ததால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில், எட்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு ஷ்ரவ்யாவிற்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அட்டாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவரை விஜய் அழைத்துச் சென்றார்.
அங்குப் பரிசோதனை செய்ததில், கருவில் இருந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் இறந்த இரட்டைக் குழந்தைகள் அகற்றப்பட்டன.
இந்தக் கொடூரமான செய்தி ஷ்ரவ்யாவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதன் விளைவாக அவர் மனமுடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளை இழந்த துக்கத்தில் இருந்த கணவர் விஜய், சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டதால், ஒட்டுமொத்தக் குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
