அமெரிக்காவில் 25 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய ஒருவர், தனது அனுபவத்தைப் பற்றி சமூக வலைதளமான எக்ஸ்-இல் பதிவிட்டிருப்பது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் ஓய்வுபெற்ற பிறகு தாய்நாட்டிற்குத் திரும்ப வந்து குடியேற விரும்பினாலும், ஒரு முக்கியப் பிரச்சினை அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது என்றும், அதுதான் “பயங்கரமான போக்குவரத்து நெரிசல்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்கள், தங்கள் பணத்தை இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்தாலும், நாட்டில் நிலவும் “கடுமையான போக்குவரத்துச் சிக்கலால்” திரும்பி வரத் தயங்குவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோவில் போக்குவரத்து நெரிசல் இருந்தாலும், அங்கு வரிசை ஒழுக்கம் இருப்பதாகவும், ஆனால் இந்தியாவில் உள்ள ஒழுங்கற்ற ஓட்டுதல், விதிமீறல் மற்றும் தொடர்ச்சியான ஹாரன் சத்தம்தான் சவாலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்குப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். “இந்தியா 150 கோடி மக்கள் தொகை கொண்டது; அதனால் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் இயற்கையானது” என்று ஒருவர் வாதிட, “ஓய்வுபெற்ற காலத்தில் ஏன் பரபரப்பான நகரங்களில் வாழ வேண்டும்?” என்று மற்றொருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிவிட்டவர், தனது ‘தாய்’ காரணமாகவே பெரிய நகரங்களைத் தவிர்க்க முடியவில்லை என்று எளிய பதிலை அளித்தார்.
மேலும், திரும்பி வர விரும்பும் என்.ஆர்.ஐ-களுக்கு, முதுமை அடையும் பெற்றோரின் அருகாமை, மலிவான மருத்துவ வசதிகள், சமையலர், ஓட்டுநர், வீட்டுப் பணிப்பெண் போன்ற உதவிகள் எளிதில் கிடைப்பது போன்ற “பல சாதகமான விஷயங்கள்” இந்தியாவை நோக்கி இழுப்பதாகவும் அவர் விளக்கினார். எனினும், சிலர் கேட்டட் கம்யூனிட்டிகள் இந்தச் சிக்கலை ஓரளவுக்குத் தீர்க்கலாம் என்றும், ஆனால் பெரிய நகரங்களின் அடிப்படை வசதிகளை உடனடியாகச் சரிசெய்வது கடினம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
