ஆப்ரிக்க நாடான காங்கோவில் உள்ள கோல்வேசி விமான நிலையத்தில், சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற சார்ட்டர் விமானம் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் சறுக்கி விபத்துக்குள்ளானது. தலைநகர் கின்ஷாசாவில் இருந்து லுவாலாபா மாகாணத்துக்குச் சென்ற அந்த எம்ப்ரேயர் ரக விமானம் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது.

சறுக்கி நின்ற அந்த விமானத்தின் பின்பகுதியில் உடனடியாகத் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து நடந்த சில வினாடிகளுக்குள் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அமைச்சர் உட்பட சுமார் 20 மூத்த அரசு அதிகாரிகள் விமானத்தில் இருந்ததாக, அமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகர் ஐசக் நயெம்போ தெரிவித்துள்ளார்.

விமானம் தீப்பிடித்ததும், பயணிகள் அவசரமாக வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு ஓடும் காட்சிகள் அடங்கிய பரபரப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமானத்தின் பின் பகுதியில் இருந்து கருப்புப் புகை வானுயரக் கிளம்ப, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடும் சத்தம் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், விமானத்தின் பின் பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. விமான விபத்துக்கான சரியான காரணம், அதாவது விமானியின் தவறு, இயந்திரக் கோளாறு அல்லது ஓடுதளத்தின் நிலை குறித்து இதுவரை விமானப் போக்குவரத்து ஆணையம் தெளிவுபடுத்தவில்லை. முன்னதாக, காலோண்டோ பகுதியில் நடந்த சுரங்க விபத்தில் 32 பேர் பலியான நிலையில், நிலைமையை ஆய்வு செய்யவே அமைச்சர் தலைமையிலான குழுவினர் இங்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.