சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான காணொளிகள் வைரலாவது வழக்கம். அவற்றில் சிரிக்க வைக்கும் காட்சிகளும், அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இருக்கும். ஆனால், தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வரும் ஒரு காணொளி, மனிதநேயத்தின் சிறந்த உதாரணமாகப் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.

ஒரு சிறிய கடையில் நடந்த இச்சம்பவம், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், மிகவும் உருக்கமடையவும் செய்துள்ளது. பொதுவாகவே, “திருடன்” என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் அல்லது கோபம் தான் வரும். ஆனால், இந்தக் காணொளியில் ஒரு சிறுமியின் துளியும் கலப்படமற்ற மாசுமருவற்ற செயல் ஒரு கொள்ளையனின் கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.

இந்தக் காணொளியை @craziestlazy என்ற பயனர் ‘X’ தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் இதை விரும்பிப் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.

அந்தக் காணொளியில், ஒரு சிறிய கடைக்குள் திருடும் நோக்குடன் ஒருவர் நுழைகிறார். அச்சமயம், தனது தந்தையுடன் கடையில் இருந்த அந்தச் சிறுமி, அவர் மெதுவாகக் கவுண்டரில் இருந்த பணத்தை எடுக்க கையை நீட்டுவதைப் பார்த்து விடுகிறாள். பயத்தில் அவளால் பேச முடியவில்லை, ஆனால் அந்தத் திருடனின் செயலைப் புரிந்துகொண்ட அவளுடைய மாசு இல்லாத கண்கள், எதிர்பாராத ஒன்றைச் செய்தன.

“>

 

பயந்தபடியே, தன் கையில் வைத்திருந்த ஒரு சிறிய லாலிபாப் மிட்டாயைத் திருடன் பக்கம் நீட்டுகிறாள். சிறுமியின் இந்தச் செயல் திருடனைப் பெரிதும் உலுக்கிவிடுகிறது. அவளது அச்சமும், அப்பாவியான அன்பும் அவனது இதயத்தைத் தொட்டதால், எடுத்த பணத்தை மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டு, சிறுமியைப் பார்த்துவிட்டு, வேறு எதையும் எடுக்காமல் மெதுவாக அந்தக் கடையை விட்டு வெளியேறுகிறான்.

இந்தக் காணொளியைப் பார்த்த பலரும், “இந்தச் சிறுமியின் அப்பாவியால் மனிதநேயம் காப்பாற்றப்பட்டது” என்று கூறி நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.