சீனாவைச் சேர்ந்த ஜாவோ டீசூ (Zhao Tiezhu) என்ற 25 வயதுப் பெண், ஒரு காட்டு உயிர்வாழும் போட்டியில் (Wilderness Survival Contest) 35 நாட்களில் 14 கிலோ எடை குறைத்துச் சாதனை படைத்துள்ளார்.

கிழக்குச் சீனாவில் உள்ள தனித்தீவு ஒன்றில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 5 வரை நடந்த இந்தப் போட்டியில் பங்கேற்ற ஜாவோ, தனது எடை 85 கிலோவிலிருந்து 71 கிலோவாகக் குறைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

கடுமையான வெப்பம், பூச்சிக் கடி, கடுமையான காயம் போன்ற சவால்களை எதிர்கொண்ட அவர், உயர் புரதம் நிறைந்த (High-Protein) உணவை மட்டுமே நம்பியிருந்தார்.

இந்தப் போட்டியில், சமைத்த உணவுகள் கிடைக்காததால், ஜாவோ தான் சேகரித்த நண்டு, அபா லோன், கடல் அர்ச்சின் (sea urchins) போன்ற கடல் உணவுகளைச் சார்ந்திருந்ததோடு, சிறு விலங்குகளையும் வேட்டையாடினார்.

இந்த 35 நாட்களில் அவர் சுமார் 50 எலிகளைப் பிடித்து, தோலை உரித்து, சமைத்துச் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். அதில் சிலவற்றை உலர்ந்த ‘ஜெர்கி’ (Jerky) போலத் தயாரித்து வீட்டிற்கும் எடுத்துச் சென்றார்.

“எலிகள் மிகவும் சுவையாக இருக்கின்றன” என்று அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கடுமையான உணவுமுறை மற்றும் முயற்சியால் அவர் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, 7,500 யுவான் (சுமார் $1,000) பரிசை வென்றுள்ளார்.