மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டைச் சாலையில் இருக்கும் ‘டிமாண்ட் பப்ளிக் பள்ளி’ என்ற தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தியா விஹார் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணா ஷிவ்கரே (12) என்ற மாணவன், நவம்பர் 6-ஆம் தேதி இந்தி வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது தவறுதலாக வேறு ஒரு பாடப்புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் மோஹித் புதௌரியா, மாணவனைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினார்.

ஆத்திரத்தின் உச்சத்தில் மாணவன் கிருஷ்ணாவின் கையைப் பிடித்து முறுக்கியும், முதுகில் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியதாலும், அந்தச் சிறுவனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தாக்குதலுக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம் தன்னை வகுப்பறையை விட்டு வெளியேற ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார். தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அந்தச் சிறுவன் ஜபல்பூருக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆசிரியர் தினமும் மாணவர்களைத் தாக்குவதாகவும், புகார் அளித்தால் பள்ளியை விட்டு நீக்குவதாக மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ராகேஷ் ஷிவ்கரே, பள்ளியின் சிசிடிவி காட்சிகளை எடுத்து, ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை பள்ளி நிர்வாகம் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.