குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம், போரிசனா கிராமத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும் தொழிலதிபருமான தீரஜ் ரபாரி, தனது இரு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீரஜ் ரபாரிக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது மகள்களைக் காரில் அழைத்துக்கொண்டு ஆதார் அட்டை பதிவதற்காக அவர் வீட்டில் இருந்து புறப்பட்டார். வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீரஜ் ரபாரி தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவிட்டு, தனது மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கால்வாயில் இருந்து மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் தற்கொலை முடிவெடுத்ததற்கான பின்னணி குறித்துக் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
