மனிதர்கள் சிலர் இரக்கமே இல்லாமல், அப்பாவி விலங்குகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வது உலகெங்கிலும் காணப்படுகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, சிலரின் கோபத்தையும், சிலரின் நெகிழ்ச்சியையும் ஒருசேர வரவழைத்துள்ளது.
தெருவில் சுற்றித்திரியும் ஒரு நாயின் வாயும் கண்ணும் தெரியாதவாறு யாரோ ஒரு கொடூரன் துணியால் இறுக்கிக் கட்டிவிட்டுச் சென்றுள்ளான். இதனால், எங்கும் செல்ல முடியாமல், எதையும் பார்க்க முடியாமல் அந்த நாய் சாலையிலேயே தவித்துக் கொண்டிருந்தது. இந்த கொடூரமான காட்சியின் தொடக்கம் மக்களைக் கோபப்படுத்தினாலும், அதன் பிறகு நடந்த சம்பவம் அனைவரையும் உருக வைத்துவிட்டது.
Evil will never disappear, but goodness will always rise stronger 🌍💫pic.twitter.com/HtHJ3sIQTW
— Enezator (@Enezator) November 6, 2025
அந்த நேரத்தில் அவ்வழியாக நடந்து சென்ற ஒரு நபர், கண்ணும் வாயும் கட்டப்பட்ட நிலையில் தவித்த அந்த நாயைப் பார்த்தார். சிறிதும் தாமதிக்காமல், அந்த விலங்கின் துயரத்தைப் போக்க முடிவு செய்த அவர், மிகவும் மெதுவாக அதன் முகத்தில் கட்டப்பட்டிருந்த துணிக் கட்டை அவிழ்த்து நாயை விடுவித்தார்.
இந்தக் காட்சி, இன்றைய பரபரப்பான உலகில் அரிதாகி வரும் மனிதநேயத்தின் அழகை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் 3.94 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
“தீமை ஒருபோதும் மறையாது, ஆனால் நன்மை எப்போதும் வலிமையாக உயரும்” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “உண்மையான ஹீரோ இவர்தான்!” என்றும், “பணம் மட்டுமல்ல, கருணை மற்றும் இரக்கத்தாலும் உதவ முடியும்” என்றும் பதிவிட்டு உதவி செய்த நபரை மனதாரப் பாராட்டி வருகின்றனர்.
