பொதுவாக, பாம்புகள் என்றாலே உலகிலேயே மிக ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஆனால், சில பாம்புகள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அசத்தலாக நடிக்கவும் செய்யும் என்பதை நிரூபிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அந்த வீடியோவில், ஒரு பாம்பு மனிதரைப் பார்த்தவுடன் செத்துப்போனது போல தரையில் தலைகீழாகக் கிடக்கிறது.

அந்தப் பாம்பு இறந்துவிட்டது என்று யாராவது நம்பும் அளவுக்கு அதன் நடிப்பு தத்ரூபமாக இருக்க, அங்குள்ள நபர் அதனை நிமிர்த்த முயல்கிறார். அந்த நபர் எத்தனை முறை அதனை நேராகத் திருப்பிப் போட்டாலும், அது மீண்டும் மீண்டும் தலைகீழாகப் படுத்து இறந்த நிலையில் இருந்து விடுகிறது.

இந்த வேடிக்கையான காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் பலருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த பாம்பு ஒரு ஹாக்னோஸ் பாம்பு (Hognose Snake) என்றும், ஆபத்து ஏற்படும்போது இதுபோல ‘செத்துப்போனது போல்’ நடிப்பதற்குப் பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்தவர்கள், “ஒவ்வொரு காட்டுக்கும் ஒரு நடிகர் இருப்பார், இன்று நிஜமான ஸ்டாரை சந்தியுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த 22 வினாடி வீடியோவை ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த ‘டிராமா கிங்’ பாம்பு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நடிக்கும் இந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“சில ஹீரோக்கள் கூட இவ்வளவு இயல்பாக நடிக்க மாட்டார்கள்” என்று கூறி இந்த விலங்கின் நடிப்பை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.