மதுரை சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகள் தானியலட்சுமி என்கிற மகாலட்சுமி (16). மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், சிறுவயது முதலே சிலம்பம் பழகி, மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுப் பல்வேறு பரிசுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாகத் தானியலட்சுமிக்குக் கைகளில் கடுமையான வலி ஏற்பட்டதால், சிலம்பம் சுற்ற முடியாமலும், பள்ளிக்குச் செல்ல முடியாமலும் துன்பப்பட்டு வந்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரும், வலி குறையாததால், சிலம்பம் விளையாட முடியவில்லையே என்ற மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரெனத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவலறிந்த தல்லாகுளம் காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராமர் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
