கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயணிகள் நிறைந்திருந்த ஓடும் பேருந்தில், சகப் பயணி ஒருவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் ரீதியான சீண்டல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் துணிச்சலுடன் செயல்பட்டு, இந்தச் சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்ததுடன், குற்றவாளியை கன்னத்தில் அறைந்து, குற்றம் சாட்டினார். பேருந்து நடத்துநர் உடனடியாகத் தலையிட்டு, அந்த நபரை எதிர்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் தன்னையும், அருகில் அமர்ந்திருந்த நபரையும் பதிவு செய்கிறார். வீடியோவின் ஆரம்பத்திலேயே, அந்த நபரின் கை அவரது அந்தரங்கப் பகுதியைத் தொடுவதைக் கண்ட அப்பெண் உஷாரடைகிறார். இருந்தபோதும், அந்த நபர் தனது கையை அவரது உள்ளாடைக்குள் நுழைக்க முயன்றபோது, அப்பெண் ஆவேசத்துடன் எதிர்வினையாற்றி அவரை பலமாகத் தாக்குகிறார். இந்த அநாகரிகச் செயல் குறித்த வீடியோ வெளியானதையடுத்து, சமூக ஊடகங்களில் பலரும் பெரும் கொந்தளிப்புடன் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

அந்தப் பெண் காட்டிய தைரியத்தையும் துணிச்சலையும் பலரும் உச்சபட்சமாகப் பாராட்டினர். “இவரை வேதியல் முறைப்படி கருத்தடை செய்ய வேண்டும்” என்றும், “தன்னுடைய கூற்றை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே, சீண்டலின் போதே வீடியோ பதிவு செய்யும் நிலைக்கு நாம் வந்துவிட்டோமா?” என்றும் பல பயனர்கள் ஆத்திரத்துடன் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.