சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டம் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டது. அப்போது, அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தம் என்ற இளைஞரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
மீட்கப்பட்ட உடலைக் கண்ட புருஷோத்தமின் குடும்பத்தினர், இறந்தது புருஷோத்தம் தான் என்று உறுதியாக அடையாளம் காட்டியதால், போலீஸார் விபத்து மரணம் என்று வழக்குப் பதிவு செய்து உடலை குடும்பத்தினரிடம் அடக்கம் செய்ய ஒப்படைத்தனர். குடும்பத்தினரும் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தனர்.
இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, புருஷோத்தமின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள், புருஷோத்தமைச் சந்தர்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாகக் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
இதனால் பெரிய குழப்பம் ஏற்பட்ட நிலையில், இறுதியில் புருஷோத்தம் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்! தனது மகன் உயிருடன் இருப்பதைப் பார்த்த தாய் மான்குன்வர் மகிழ்ச்சியில் உறைந்துபோனார்.
இந்த நிலையில், புருஷோத்தம் என்று கருதி அடக்கம் செய்யப்பட்ட அந்த நபரின் உடலின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் உடைமைகளை வைத்து, அந்த நபர் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் தற்போது போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்த நபர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
