கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஜூலை 14-ஆம் தேதி இரவு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலாசி பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர்.
சோதனையில், இந்த மிரட்டல் ஒரு புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு மற்றும் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மற்ற வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் குறித்து பெங்களூரு வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த 30 வயது ரெனி ஜோசில்டா என்ற பெண் கம்ப்யூட்டர் இன்ஜினியரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். ரெனி ஜோசில்டா ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், அந்த வாலிபர் இவரைத் திருமணம் செய்யாமல் வேறொரு இளம்பெண்ணைத் திருமணம் செய்ததால், ரெனி ஆத்திரமடைந்தார்.
வேறு பெண்ணைத் திருமணம் செய்த தனது காதலனை போலீஸில் சிக்க வைக்க ரெனி திட்டமிட்டுள்ளார். இதற்காக, காதலனின் இ-மெயில் முகவரியைப் பயன்படுத்தி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டலை அனுப்பி வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், ரெனி ஏற்கனவே குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், மைசூரு, சென்னையில் தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவங்களுக்காக குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அகமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் ரெனிதான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது சைபர் கிரைம் போலீஸாருக்குத் தெரியவந்ததால், அகமதாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ரெனி, வி.பி.என். (VPN) இணையதளம் மற்றும் கேட்கோட் (Catcode) அப்ளிகேஷன் மூலமாக வெர்ஜுவல் செல்போன் எண்களைப் பெற்று, 6-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
ரெனி கைதானதன் மூலம், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாகப் பதிவான 6 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. காதலனை போலீசாரிடம் சிக்க வைக்க முயன்று, பெண் இன்ஜினியரே சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
