கிழக்கு டெல்லியின் பத்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சாஹில் தனேஜா – திவ்யா தம்பதியினருக்குக் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருந்தது. இதன் காரணமாக, செயற்கைக் கருத்தரிப்பு (IVF) மூலம் திவ்யா கர்ப்பமடைந்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு 22 வாரங்களிலேயே பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் வெறும் 22 வாரங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்போது அந்தக் குழந்தையின் எடை வெறும் 525 கிராம் மட்டுமே இருந்தது.

உடனடியாகப் பிறந்த பச்சிளங் குழந்தையை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துப் பாதுகாப்பாகப் பராமரித்தனர். தொடர் சிகிச்சையின் பலனாக, 105 நாட்களுக்குப் பிறகு அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எடை தற்போது 2.010 கிலோவாக உயர்ந்துள்ளது.
இது போன்ற மிகக் குறைவான வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் தப்பிப் பிழைப்பது அரிது என்று மருத்துவர்கள் கூறினாலும், நவீன சிகிச்சை முறைகள், சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பெற்றோரின் ஈடுபாடு ஆகியவற்றால், இதுபோன்ற குழந்தைகள் பிழைப்பதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
