கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் ஜோடி ஒரே வீட்டில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக வேலை செய்தவர் ராகேஷ் பாத்ரா (23). இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். அதே நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த சீமா நாயக் (21) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த காரணத்தால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்யாமல், இருவரும் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ராகேஷ் மற்றும் சீமா இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ராகேஷ் வசித்து வந்த வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் கொண்டு நேற்று காலையில் கதவைத் திறந்து பார்த்தபோது, சீமா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். அருகில் ராகேஷ் தரையில் இறந்த நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்த  போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 19-ம் தேதி நள்ளிரவில் ராகேஷ் முதலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிகாலையில் சீமா எழுந்து, காதலன் தூக்கில் தொங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரின் உடலை கீழிறக்கிய பின்பு, தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இந்த ஜோடி கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், தற்கொலையின் காரணம் அதுவாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.