மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் தலித் இளைஞர் ஒருவரை மூன்று பேர் தாக்கி, சிறுநீர் குடிக்க வற்புறுத்திய கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாமோவில் நடந்த கால் கழுவும் சர்ச்சைக்கு பிறகு  இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் தகவலின்படி, குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞரை மூன்று பேர் கடத்தி, பிந்த் மாவட்டத்தில் உள்ள சசுப்ரா பகுதியில் கொண்டு சென்று தாக்கியுள்ளனர். பின்னர் அவரை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, குற்றவாளிகள் அவரை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் ஓட்டுநராக இருப்பவர். சில நாட்களுக்கு முன்பு டாடாவலி கிராமத்தைச் சேர்ந்த சோனு பருவாவுக்காக ஒரு போலிரோ காரை ஓட்டி வந்ததாகவும், பின்னர் வேலையை விட்டு குவாலியரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றதாகவும் தெரிவித்தார். திங்கட்கிழமை இரவு, சோனு பருவா தனது நண்பர்கள் அலோக் பதக் மற்றும் சோட் ஓஜாவுடன் குவாலியரில் உள்ள தீனதயால் நகரில் பாதிக்கப்பட்டவரின் மாமியார் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. மூவரும் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, பிந்த் மாவட்டம் சுர்புரா கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை கொடூரமாக தாக்கி, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தினர்.

அதன் பின்னர் உடல்நிலை மோசமடைந்த அவரை அங்கேயே விட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். பின்னர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ தகவல் கிடைத்ததும், பிந்த் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து பிந்த் மாவட்ட மருத்துவமனையில் ஏஎஸ்பி சஞ்சீவ் பதக் மற்றும் கலெக்டர் கரோடி லால் மீனா ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர்.

இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது: பாதிக்கப்பட்டவர், சோனு பருவா, அலோக் பதக் மற்றும் சோட் ஓஜா ஆகியோர் தன்னை கடத்தி, தாக்கி, சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதில் சோனு மற்றும் அலோக் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது குற்றவாளியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது,” என தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.