கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள ஆஞ்சக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மா (45). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், திருமணமானவர்; கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வள்ளியம்மா மர்மமாக மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், வள்ளியம்மாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பழனி (52) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக போலீசார் கண்டறிந்தனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் வள்ளியம்மா வேறொருவருடன் பழகுவதாக சந்தேகித்த பழனி, அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வனப்பகுதியில் விறகு சேகரித்து கொண்டிருந்தபோது, கோடரியால் தலையில் அடித்து வள்ளியம்மாவை கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது.
அதன்பின், பழனி வனப்பகுதியில் குழி தோண்டி வள்ளியம்மாவின் உடலை புதைத்தார். போலீசார் விசாரணையின் போது பழனியை கைது செய்து, அவர் காட்டிய இடத்தில் தோண்டியதில், வள்ளியம்மாவின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது.
அந்த உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ அறிக்கையில், தலையில் ஏற்பட்ட காயத்தால் வள்ளியம்மா உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
விசாரணையின் போது குற்றத்தை பழனி ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் அட்டப்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை புதூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
