சில குடும்பங்களில், முதுகு வலி அல்லது உடல் வலி ஏற்பட்டால், குழந்தைகள் அல்லது பெரியவர்களை முதுகில் ஏறி மிதிக்கச் சொல்வது பழக்கமாக உள்ளது. இது ஒரு பாரம்பரிய முறையாக தோன்றினாலும், இது உடலுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசிய நிபுணர், ஒரு நபர் முதுகின் மீது ஏறி மிதிக்கும்போது, முதுகெலும்பு மற்றும் தசைகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படும் என்று கூறுகிறார். இதனால் தசைகள் கிழிந்து போகலாம் அல்லது எலும்பு முறிவு ஏற்படலாம்.
மேலும், இது உள்ளுறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை காயப்படுத்தி, உயிருக்கே ஆபத்து வரலாம் என்று அவர் எச்சரிக்கிறார். எனவே இதுபோன்ற ஆபத்தான முறைகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதற்கு பதிலாக, உடல் வலி இருந்தால் சூடான தண்ணீரை வைத்து ஒத்தடம் கொடுப்பது நல்லது. அல்லது உடலை மெதுவாக ஸ்ட்ரெச் செய்து தளர்த்தினால் வலி குறையும் என்றும் கூறுகிறார். இது போன்ற பாதுகாப்பான வழிகளை பின்பற்றி உடல்நலத்தை காக்க வேண்டும்.
