இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், பைக் ஓட்டும் ஒரு நபர் சாலையோர போர்டுகளில் உள்ள ஊர்ப் பெயர்களின் நிறங்களைப் பற்றிய சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பயணிக்கும்போது, ஒரு போர்டில் இரண்டு நிறங்களில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்ததை கண்டார். ஆர்வமாக இணையத்தில் தேடியபோது, பச்சை நிறம் நெடுஞ்சாலைகள் மற்றும் செல்ல வேண்டிய வழித்தடங்களைக் குறிக்கும் என்றும், பிரவுன் நிறம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா இடங்களைக் குறிக்கும் என்றும் தெரிந்து கொண்டார். இந்த தகவல் அவருக்கு புதியதாக இருந்தது.
அந்த போர்டில், நாகர்கோயில் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்கள் பிரவுன் நிறத்தில் இருந்தன. இவை இரண்டும் பிரசித்திப் பெற்ற கோவில்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் நிறைந்த பகுதிகள் என்பதால் அந்த நிறம் பொருத்தமாக இருந்தது. அதேநேரம், பச்சை நிறத்தில் சுசீந்திரம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன, அவை முக்கிய வழித்தடங்கள். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் இதுபோன்ற சாலை அறிவிப்புகளின் ரகசியங்களை அறிந்து கொண்டுள்ளனர்.
