கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த காதல் துரோகம் மற்றும் கோபத்தின் காரணமாக நடைபெற்ற கொடூரக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் திருமணமாகி மனைவியும் குழந்தையும் உள்ள குடும்பஸ்தராக இருந்தாலும், கடந்த காலத்தில் தேவி என்ற பெண்ணுடன் இருந்த பழக்கத்தை மறக்காமல் தொடர்ந்து வருகிறார் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது.
தேவிக்கு ஜாதகம் சரியில்லை என்று கூறி சந்தோஷுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என சொல்லி, அவருக்கு வேறு ஒருவர் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், கண்ணம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரை தேவி திருமணம் செய்து கொண்டு, சூலூர் அருகே வசித்து வந்தார்.
இருப்பினும், திருமணத்திற்கு பின் கூட சந்தோஷ் மற்றும் தேவி இருவரும் இன்ஸ்டாகிராம், மொபைல் ஆகியவற்றின் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இது தேவியின் கணவரான ரவிச்சந்திரனின் கவனத்திற்கு வந்ததும், சந்தோஷை எச்சரித்து இருந்தார்.
ஆனால் எச்சரிப்புகளை ஏற்றுக்கொள்ளாத இருவரும் தொடர்ந்து பேசியதால், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தனது உறவினரான நவீனுடன் சேர்ந்து சந்தோஷை தாக்க திட்டமிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சந்தோஷ் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், இருவரும் வந்து தகராறு செய்து, கத்தியால் கழுத்தில் குத்தியதுடன், இரும்புக் கம்பியாலும் தாக்கினர்.
இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இருவரும் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட சந்தோஷின் உடல் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சூலூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவிச்சந்திரன் மற்றும் நவீனை கைது செய்தனர்.
