உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு கணவனுடன் சந்தைக்கு சென்ற 35 வயது பெண்மணி ஒருவர் பயங்கர விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குலோதி சந்தைப் பகுதியில், அனுராதா என்ற பெண்ணும் அவரது கணவர் ஹரியோமும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அவர்களது வாகனத்தை மோதியது.

இந்த கோர விபத்தில் அனுராதாவின் உடல் படுகாயமடைந்து, அவரது இதயம் உடலில் இருந்து பிய்ந்து வெளியே விழுந்து சில நொடிகள் துடித்தது.

அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஆனால் அவரது கணவர் ஹரியோம் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தையும் கிராமத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அனுராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆனால், உடலை தகவல் தெரிவிக்காமல் அனுப்பியதால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பில்குவா காவல் அதிகாரி அனிதா சவுகான் மற்றும் பிற அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்தனர்.

குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், லாரி ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக அனிதா சவுகான் தெரிவித்தார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.