2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது பயணத்தை, காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் வணங்கிய பின் தொடங்கியுள்ள துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இப்பயணம், மாவட்டம் தோறும் கழகத்தினரின் கருத்துக்களை நேரில் கேட்பதற்கான முக்கிய முயற்சியாகவும், தேர்தல் வெற்றிக்கான தயாரிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் உரையாற்றிய உதயநிதி, தமிழக வளர்ச்சி முறை மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சாதனைகள் குறித்து விளக்கினார். “தமிழ்நாடு இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன் நிலையில் உள்ளது. 11% வளர்ச்சி விகிதத்தை அடைந்த ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” என்று கூறினார். மேலும், பெரியப்பட்டி, திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் கல்வி மற்றும் கட்டட வசதிக்காக பல கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்தார்.
மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல், நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என அனைத்திலும் முறைகேடாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். “தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளை 32-ஆகக் குறைக்க பாஜக முயற்சி செய்கிறது. இதற்கெதிராக, தமிழக முதல்வர் தான் இந்தியாவில் குரல் கொடுக்கிற ஒரே தலைவர்” என்றார்.
அதிமுகவில் இன்று இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி, செங்கோட்டையன் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன. திருச்சியில் மட்டும் மூன்று அணிகள் தனியாக இயங்குகின்றது.
அதிமுகவில் உருவாகியுள்ள குழப்பங்களை கடுமையாக விமர்சித்த உதயநிதி, எடப்பாடி பழனிசாமியின் நிலைத்தன்மையற்ற அரசியல் நிலைப்பாடு மற்றும் பாஜகவுடன் நடைபெறும் ‘முகமூடி’ கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார். “இப்போது அவரை மக்கள் முகமூடி பழனிசாமி என்றுதான் அழைக்கிறார்கள். நாளுக்கு நாள் கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் கீழமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், 12 லட்சம் மனுக்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் சாதனை எனவும் தெரிவித்தார். திமுகவின் இலக்கு 200 தொகுதிகளில் வெற்றியெடுக்க வேண்டும் என்பதுதான் என்றும், அந்த வெற்றியின் துவக்கம் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து அமையவேண்டும் என்றும் உறுதியுடன் பேசினார்.
