ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் காரணமாக, ஈரானில் வசிக்கும் மற்றும் அங்கு மீன்பிடி தொழிலுக்காகச் சென்று தவித்து வரும் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு அதிரடியாக அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.

ஈரானில் உள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையால் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய அயலகத் தமிழர் நல வாரியம் போர்க்கால அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையைத் திறந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ​அதன்படி, இந்தியாவில் உள்ளவர்கள் தொடர்புகொள்ள 1800 309 3793 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அவசர உதவிக்கு மிஸ்டு கால் கொடுக்க +91 8069009901 மற்றும் +91 8069009900 ஆகிய எண்களையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தமிழர்களைப் பத்திரமாக மீட்கும் அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த அறிவிப்பு, ஈரானில் தவிக்கும் தமிழர்களின் குடும்பங்கள் மத்தியில் தற்சமயம் சற்று நிம்மதியையும், அதே சமயம் திக் திக் நிமிடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.