அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்போர்ட்ஸ் அரெனவில் நடைபெற்ற Checkmate USA vs India எனும் போட்டியில், உலக சாம்பியன் டி. குகேஷை எதிர்த்து விளையாடிய அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா, போட்டி முடிந்தவுடன் குகேஷின் ராஜா செஸ் காயினை கூட்டத்தில் தூக்கி எறிந்த காட்சி தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த போட்டியில் அமெரிக்கா 5-0 என இந்தியாவை வீழ்த்தியது.

போட்டியின் கடைசி பகுதியில் நகமுரா தனது வெற்றியை கொண்டாடிய விதம் தான் தற்போது ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளம் இந்திய வீரரிடம் அவர் காட்டிய நிலைமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் உலக சாம்பியன் விளாடிமிர் கிராம்னிக் மற்றும் கெவின் கோ வெய் மிங் ஆகியோர் நகமுராவின் நடத்தை மிகுந்த ‘மரியாதையற்றது’ என கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் அனிஷ் கிரி மட்டும், “இதில் இவ்வளவு பரபரப்பாக என்ன இருக்கிறது?” என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அனைவரையும் கவர்ந்தது, குகேஷின் அமைதியான எதிர்வினை தான். தனது ராஜா காயினை தூக்கி எறியப்பட்டதைக் கண்டும், எந்த கோபமும் இல்லாமல் விளையாட்டு சுழற்சி முறைப்படி தாள்களை மறுபடியும் அடுக்கத் தொடங்கிய குகேஷின் நிதானமும், தைரியமும், ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “கிங் தள்ளப்பட்டாலும், கிங் தான்” என இந்தியர்கள் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார்கள்.