சென்னை திருவொற்றியூரில் உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வந்த இளம்பெண் ஜோதிகா (வயது 23) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கோபால் (29) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கோபால் மீது ஏற்கனவே திருவொற்றியூர் மற்றும் சாத்தாங்காடு போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் மேட்டுத் தெருவுக்கு குடிபெயர்ந்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு, கோபால் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து, “என் மனைவி வீட்டில் மயக்க நிலையில் இருக்கிறார்” என்று தகவல் அளித்தார். ஆனால், அவரது மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்ததால், அவரது நடத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஜோதிகா வீட்டில் உயிரிழந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்ததாகவும், உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜோதிகா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கணவர் கோபால் கழுத்தை நெரித்து கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதுடன், கோபால் அடிக்கடி போதையில் மனைவியிடம் சண்டையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
