குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தில், வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர், பின்னர் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சகாயஜோஸ் (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குளச்சலுக்கு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், சம்பவத்தன்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அதனால் அவரது 36 வயதான மனைவி, வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை வேளையில், ஒரு வாலிபர் அந்த வீட்டின் மேல்மாடிக் கதவின் பூட்டை கம்பி மூலம் உடைத்து உள்ளே நுழைந்தார்.
வீட்டின் பீரோவையும், மற்ற அறைகளையும் தேடி பார்த்த அவர், பணம் அல்லது நகைகள் எதுவும் இல்லை என்பதால் ஏமாற்றம் அடைந்தார். பின்னர் அவர், தூங்கிக் கொண்டிருந்த பெண் இருந்த அறைக்குள் சென்று, அவரை பார்த்ததும் கொள்ளை முயற்சியை மறந்து தவறான நோக்குடன் சில்மிஷம் செய்துள்ளார். தான் கொண்டு வந்திருந்த கத்தரிக்கோலால் நைட்டியை வெட்டிய அவர் பெண் கண்விழித்ததும், அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றார்.
உடனே பெண், “திருடன்… திருடன்…” என்று கத்த, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து மக்கள் திரண்டு வந்ததால், அவரைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் குடியிருப்பு பகுதியில் ஒளிந்து கொண்டு தப்ப முயன்றார். இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு பெண் தொலைபேசியில் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடத்தினர். இதில், குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கீழமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாயஜோஸ் (24) என்பதும், சம்பவத்தன்று வீட்டின் முன்பாக ஆண்கள் அணியும் செருப்பு இல்லாததை கவனித்து, வீட்டில் ஆண் இல்லையென்று உறுதி செய்து கொள்ளையடிக்க முயன்றதும், ஆனால் விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லாததால் சபலமடைந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், சகாயஜோஸ் மீது மணவாளக்குறிச்சி மற்றும் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகள் மற்றும் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் அவரை கைது செய்து, இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் கொண்டு, சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
