மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் “கோல்ட்ரிப்” என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 11 குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரு மாவட்டத்திலும் இதே மருந்தை குடித்த இரு குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு மாநிலங்களிலும் இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருந்தை பரிந்துரைத்த பராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவர் பரவீன் சோனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களே பெரும்பாலான பாதிக்கப்பட்ட குழந்தைகள் என தெரியவந்தது.
தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் மருந்தில், டை-எத்திலீன் கிளைக்கால் எனப்படும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் 48.6% அளவில் இருந்தது ஆய்வக அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது உடலின் சிறு நீரகங்களைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் திறனுடையது. குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான இந்த மருந்து, பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரமாகவே இது அமைந்துள்ளது. இந்த மருந்தை உற்பத்தி செய்த நிறுவனம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
