பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கோத்தே கிராமத்தில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது வயதான மாமியாரை அவரது மருமகள் திட்டவட்டமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வீடியோவில், மாமியார் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலையில், மருமகள் அவருடைய தலைமுடியை பிடித்து இழுப்பதும், கண்ணாடி கிளாசால் தாக்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

 

முழு சம்பவமும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அந்த மாமியாரின் பேரன் அருகில் நின்று வீடியோ பதிவு செய்துக் கொண்டிருந்தார். “அம்மா, பாட்டியை அடிக்காதே” என கேட்டுக் கொண்டாலும், அவன் இதைத் தடுக்கவே இல்லை.

தாக்குதலுக்குப் பிறகு, 80 வயதான குர்பசன் கௌர் மூச்சு விட சிரமப்பட்டதாகவும், அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து, டிப்பர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குர்பசன் கௌர் தெரிவித்ததாவது, “என் கணவர் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியராக இருந்தவர். அவருடைய இறப்புக்குப் பிறகு, என் மருமகள் அடிக்கடி என்னை அடித்து சித்திரவதை செய்கிறார். அவர் என் மகனையும் மன அழுத்தத்துக்குள்ளாக்கி, சொத்துக்களை தன் பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்” என்றார்.

மேலும், அவரது பேரன் சாரத்வீர் சிங் கூறும்போது, “என் அம்மா மது பழக்கத்திற்கு அடிமையானவர். குடித்த பின் அடிக்கடி பாட்டியையும், அப்பாவையும் தாக்குகிறார். அந்த நாள் கூட, பாட்டியை அடித்ததை வீடியோவாக பதிவு செய்தேன். போலீசில் புகார் செய்தோம், ஆனாலும் போலீசார் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டனர். என் பாட்டிக்கு நீதி கிடைக்க, என் அம்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.