சென்னையில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர், தனது முதல் மனைவி மரணமடைந்த பிறகு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிங்கி (36) என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜோன்ஸ் சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்த தம்பதிகள், ஒரே இடத்தில் தங்கியிருந்து வாழ்ந்து வந்தனர்.
வாழ்க்கையில் ஏற்பட்ட இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட அந்த தம்பதிகள், இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த 28ம் தேதி இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து மது அருந்திய போது, போதை அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது. வாக்குவாதம் கைகலப்பாக மாற, சர்தார் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். உயிருக்காக போராடிய பிங்கி, அருகில் இருந்த கத்தியை எடுத்து கணவனின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதன் பின்னர் ரத்தவெள்ளத்தில் விழுந்த சர்தாரை முதலில் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீசார் நடவடிக்கையில் இறங்கி, பிங்கியை கைது செய்து கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
