கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்த உரிகம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீலஜா என்பவர், தனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் வரதட்சணை கோரி தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலஜா, கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த அருண்குமாரை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளார்.
இந்த நிலையில், அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், தொடர்ந்து வரதட்சணை கேட்டு ஸ்ரீலஜாவை துன்புறுத்தி வந்ததாகவும், சமீபத்தில் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு அவர் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ ஆதாரத்துடன் ஸ்ரீலஜா, ஆனேக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டோர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
