திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி பகுதியில், மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்யும் நோக்கத்தில் மருமகன் ஒருவர் காரை ஏரிக்குள் ஓட்டிச் சென்ற பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது.

ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். அவரது மகன் அரவிந்தன் (32) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பக்கிரிதக்கா பகுதியை சேர்ந்த ராஜாவின் மகள் நந்தினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன. நந்தினி தற்கொலை முயற்சியும் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அரவிந்தன் தனது மாமனார் ராஜா, மாமியார் காளியம்மாள் மற்றும் உறவினரின் மகளான 7 வயதுச் சிறுமி பிரசிகா ஆகியோருடன் காரில் ஏலகிரி நோக்கி சென்றார்.

ஏலகிரி ஏரிக்கரையை வந்தபோது, காரை திடீரென ஏரிக்குள் பாய்த்தார். ஏரியில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால், கார் முழுமையாக நீரில் மூழ்கியது. இதில் ஏற்பட்ட பரபரப்புடன், அரவிந்தன் காரில் இருந்து தப்பித்து ஓடி விட்டார்.

பின்னர் மாமனார் ராஜா, மாமியார் காளியம்மாள் மற்றும் சிறுமி பிரசிகாவை  ஆகியோரை காப்பாற்றி கரைக்கு அழைத்துவந்தார்.

இதையடுத்து, ராஜா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் மருமகன் அரவிந்தனைப்பற்றி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அரவிந்தனை கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், காரை தீயணைப்பு படையினரின் உதவியுடன் கிரேன் மூலம் ஏரியில் இருந்து மீட்டனர். மருமகன் தனது மாமனார், மாமியாரை கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் ஏலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.