மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (19), பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இவரது தாய்மாமன் மகள் பிரதீபா (17) சிவகாசியைச் சேர்ந்தவர். நர்சிங் கல்லூரியில் படித்து வந்த பிரதீபா, சமீப காலமாக கல்லூரிக்கு செல்லவில்லை என்றும், இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஜெயசூர்யா வேலைக்கு செல்லாமல் இருப்பதை காரணமாகக் கொண்டு, பிரதீபா அவரிடம் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, அவரிடம் பலமுறை வாக்குவாதம் செய்து, பேச்சை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். ஆனால் பிரதீபா அதற்கு மாறாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் கோபமடைந்த ஜெயசூர்யா, நேற்று அழகர் கோவிலுக்கு அழைத்து செல்லும் பெயரில் பிரதீபாவை ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கீழே கிடந்த கல்லால் பிரதீபாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் ஜெயசூர்யா நேரில் ஒத்தக்கடை போலீசில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.