அமெரிக்கா, காலிஃபோர்னியாவில் பகல் நேரம் என்பது கூட இனி பாதுகாப்பான காலமில்லை என்பதைக் காட்டும் வகையில், சான் ரமோன் நகரத்தில் ஒரு நகைக்கடை மீது 25 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒரு மர்மமான தாக்குதல் நடத்தியது. Heller Jewelers எனும் பிரபல நகைக்கடையில் கடந்த திங்கள்கிழமை நடந்த இந்த சம்பவம், தற்போது சிசிடிவி வீடியோவுடன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

இதில், முகம் மூடிய கொள்ளையர்கள், 80 விநாடிகளுக்குள் ₹9 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். போலீசாரின் செய்தியின்படி, கொள்ளை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. 6 வாகனங்களில் வந்த கும்பல், கடைக்கு வெறும் 100 அடி தொலைவில் உள்ள வாலே பகுதியில் வாகனங்களை நிறுத்தி, மிக வேகமாக கடையை தாக்கினர்.

லெப்டினன்ட் மைக் பிஸ்டெல்லோ கூறுகையில், “இந்த கொள்ளை 1 நிமிடம் 20 விநாடிக்கு மேல் நடக்கவில்லை. ஆனால் அந்த சுருக்கமான நேரத்தில் கடை முழுக்க உள்ள நகைகளை முழுமையாக பறித்துவிட்டனர்,” என தெரிவித்துள்ளார். இது முதல் தடவையல்ல என்பதே அதிர்ச்சி அளிக்கிறது.

இதே கடை 2023-இலும் ₹9 கோடி மதிப்பிலான நகை கொள்ளைக்கு உள்ளாகி இருந்தது. அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும், இந்த முறை பாதுகாப்பு கதவுகளை சுட்டுத் திறந்து, கொள்ளையர்கள் மீண்டும் தப்பினர்.

காவல்துறையினர் அவர்களில் ஒரே ஒரு வாகனத்தைத் தொடர்ந்து பிடிக்க முயற்சித்த போதும், போக்குவரத்து நெரிசலால் பாதுகாப்புக்காக வாகனத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிர கொள்ளை வீடியோ தற்போது இணையத்தில் பரவி, பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.