நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொடூர சம்பவமாக மாறியிருக்கிறது. 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சக மணவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்பட்டதால், அவரிடம் முற்றிலும் விரோதம் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை, வகுப்பறைக்கு வந்த அந்த மாணவர், பைக்கில் அரிவாளை ஒளித்து கொண்டு வந்து, தன்னை அவதூறாக பேசியதாக நினைத்த மற்றொரு மாணவரை திடீரென அரிவாளால் தாக்கினார். இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதும், அதனை தடுக்க முனைந்த மற்றொரு மாணவரும் வெட்டுப்பட்டு காயமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இருவரும் உடனடியாக அருகிலுள்ள ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் அரிவாள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை எவ்வாறு கொண்டு வருகிறார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
