பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள லோயர் தீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி சுமைலா, இணையத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறார். இவர் பாகிஸ்தான் பயண வீடியோ பதிவரான பரீரா கானுடன் வைரலாகிய ஒரு வீடியோவில், அசத்தலான ஆங்கிலத்தில் உரையாடுவதைப் பார்க்க முடிகிறது.

கடைவீதியில் உலர் பழங்கள் விற்கும் இந்தச் சிறுமி, பள்ளிக்கூடத்தின் பக்கம்  கூட பார்க்கவில்லை என்பது ஆச்சரியமூட்டும் உண்மை. ஆனால், ஆங்கிலம், ரஷ்யன், அரபி, சீனம், பஷ்டோ, உருது என ஆறு மொழிகளை அவர் திறம்பட பேசுகிறார். மேலும், சில மொழிகளில் எழுதவும் தெரிந்தவர் இந்த சிறுமி.

 

View this post on Instagram

 

A post shared by Barira Khan (@beeingbarira)

சுமைலா தனது தந்தையின் வழிகாட்டுதலுடன், மொபைல் ஃபோனில் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் இந்த அயல் மொழிகளைக் கற்றுக் கொண்டதாக பரீராவிடம் தெரிவித்தார். இந்தச் சிறுமியின் அசாத்திய திறமையும், தன்னம்பிக்கையும் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவைப் பார்த்த பலரும், சுமைலாவின் திறமைக்கும், அவரது தந்தையின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிலர் இவருக்கு புத்தகங்கள் அனுப்பவும், படிப்பு செலவுக்கு உதவி செய்யவும் முன்வந்துள்ளனர். “இந்தச் சிறுமியின் ஆங்கிலப் புலமை, பெரிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையே மிஞ்சுகிறது” என்று ஒரு நெட்டிசன் புகழ்ந்துள்ளார்.