சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய அதிரடிச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் சிலிண்டர் முன்பதிவு செய்த வெறும் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே அவர்களின் வீடு தேடி சிலிண்டரை டெலிவரி செய்யும் அதிவேகச் சேவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு அச்சத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை முற்றிலுமாகத் தவிர்க்கும் நோக்கில் இந்த நவீன முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக ‘இன்டேன் எக்ஸ்ட்ரா லைட்’ என்னும் புதிய வகை 10 கிலோ எடையிலான ஃபைபர் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான இரும்பு சிலிண்டர்களின் எடையைக் குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் கூட்டுப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன சிலிண்டரின் மிகப்பெரிய சிறப்பு, இதன் மீதுள்ள ஒளி ஊடுருவும் தன்மையாகும். இதன் மூலம் சிலிண்டருக்கு உள்ளே இன்னும் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதைப் பயனாளர்கள் எவ்வித சிரமமுமின்றி வெளியிலிருந்தே நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.
முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் சில நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த இந்த விரைவு டெலிவரி சேவை, தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்டேன் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள். இதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.3,000 வைப்புத்தொகையைச் செலுத்தி இப்புதிய இலகுரக சிலிண்டர் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
