மத்தியப் பிரதேசத்தின் கலாச்சார நகரமான ஜபல்பூர், நர்மதை நதிக்கரையின் அழகிற்கு பெயர் பெற்றது. ஆனால், இந்தியாவின் மற்ற பெருநகரங்களைப் போல அங்குள்ள நெரிசலான சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை. வழக்கமாக விபத்துகள், விஐபி கான்வாய் அல்லது சாலைப் பள்ளங்கள் காரணமாகத்தான் அங்கு டிராஃபிக் ஜாம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன், சமூக வலைதளங்களிலும் காட்டுத் தீ மாதிரி பரவி வருகிறது.

சம்பவம் நடந்தது கடந்த வியாழக்கிழமை அன்று ஜபல்பூரின் ‘கதா’ பகுதியில். குறுகலான அந்தச் சாலையில் கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தை மெதுவாக நகர்த்திக் கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். பாதையை எளிதாகக் கடப்பதற்காகவும், அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காகவும் டிரைவர் மிகவும் நாகரிகமாக, “அக்கா கொஞ்சம் ஓரமாகப் போங்கள்” என்று கூறியுள்ளார். ஆனால், அந்த வார்த்தை இடி போல அந்தப் பெண்ணைப் பற்றிக் கொள்ளும் என்று டிரைவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 

 

View this post on Instagram

 

A post shared by For Men India (@for.men.india_)

“நான் உனக்கு உடன்பிறந்த சகோதரியா? என்னை பார்த்து அக்கா என்று எப்படி அழைக்கலாம்?” என்று அந்தப் பெண் நடுரோட்டிலேயே கொந்தளித்து விட்டார். அதிர்ந்து போன டிரைவர், தான் மரியாதைக்குத்தான் அவ்வாறு அழைத்ததாக விளக்கமளித்தும், அந்தப் பெண் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஆத்திரம் தீராத அந்தப் பெண், நேராக அந்த காரின் முன்பகுதியிலேயே வந்து நின்றுகொண்டு வழியை மறித்தார். வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹார்ன் அடித்தும், அவர் அங்கிருந்து நகர்வதாக இல்லை. காரை இயக்கினால் அந்தப் பெண் மீது மோதிவிடும் அபாயம் இருந்ததால், டிரைவரும் காரை நகரவிடாமல் அப்படியே நிறுத்தினார்.

இந்த விசித்திரமான சண்டை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்தது. இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அடியில் நின்று ஸ்தம்பித்தன. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து  வெளியிட, அது தற்போது இணையத்தில் வைரலாகி விவாதாமாக மாறியுள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் ‘அக்கா’ அல்லது ‘அண்ணா’ என்பது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தும் சொற்கள். ஆனால், இன்றைய காலத்தில் இந்த எளிய வார்த்தைகள்கூட இவ்வளவு பெரிய சண்டைகளுக்கும், சாலை மறியல்களுக்கும் காரணமாக மாறுவது மக்களிடையே விந்தையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அன்பாக அழைக்கக் கூட பயப்பட வேண்டிய சூழலுக்கு சமூகம் வந்துவிட்டதா என்ற கேள்வியுடன் இந்தச் செய்தி அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.