தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு அம்ரிஷ் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தை இருந்தது.

மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற நிலையில், தனது தந்தை மாதப்பனுக்கு உதவியாக, மோனிஷா குழந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பில்லியானூரில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த இரவு வீட்டு முன் அம்ரிஷ் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மோனிஷா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தேடினர். பின்னர், வீட்டருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தேடியபோது, குழந்தை அம்ரிஷ் தவறி விழுந்து கிடப்பதை பார்த்து அனைவரும் சோகமடைந்தனர்.

உடனடியாக மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்தவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் மரணம், அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.