அதிமுக ஒன்று சேர்ந்தே பயணிக்க வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் திடீரென அகற்றப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவரது அடுத்த நகர்வு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்திலும் உருவானது.

இந்த சூழலில், விருதுநகர் மற்றும் சிவகாசியை சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர், இன்று (செப்.21) ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினர்.

அப்போது, அவர் எடுத்த நியாயமான நிலைப்பாட்டை பாராட்டிய அவர்கள், முழுமையான ஆதரவை தெரிவித்தனர். அதிமுகவில் இருப்பது மட்டுமல்லாமல், உண்மையான திசையைக் காட்டும் தலைவர்களுக்கு ஆதரவு தேவை என அவர்கள் கூறினர்.

மேலும், செங்கோட்டையனுக்கு நேரில் நன்றியை தெரிவித்த அவர்கள், அவரது அரசியல் முடிவுகளுக்கு உறுதி மற்றும் ஊக்கமாக இருப்போம் என உறுதியளித்தனர். இந்த சந்திப்பு, அதிமுக அரசியல் சூழலில் புதிய திருப்பமாகவும், ஓ.பி.எஸ் அணியின் எதிர்கால திட்டங்களுக்கும் வலுவூட்டலாகவும் பார்க்கப்படுகிறது.