கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தனியார் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் பழுதடைந்து இருப்பதால் அதனை சரிசெய்ய பராமரிப்பாளர்கள் வந்திருந்தனர். அப்போது ஏடிஎம் அறையில் இருந்த கேமராக்களை அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது 2 வாலிபர்கள் எந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்திருப்பது வீடியோ மூலம் தெரியவந்தது. உடனடியாக அங்குள்ள அனைத்து ஏடிஎம் மையங்களையும் பராமரித்து வருபவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஓசூர் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தை முரளி என்பவர் கண்காணித்துக் கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் உள்ளே நுழைந்தனர். இவர்களின் முகமும் ஏற்கனவே பழுதான ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்த நபர்களின் முகமும் ஒன்றாக இருப்பதை கண்ட முரளி உடனே ஷட்டரை வெளியே பூட்டிவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏடிஎம் மையத்திற்குள் இருந்த 2 கொள்ளையர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏடிஎம் மையங்களை நோட்டமிட்டு பணத்தை திட்டமிட்டு கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பணத்தை கொள்ளையடித்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தாகிர், முகமது சாத் மற்றும் இவர்களுக்கு உதவிய ஹசம் ஆகிய 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.