பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் வெளிநாட்டு சுற்றுலா ஜோடிக்கு எதிரான நடத்தை ஒன்று தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு இந்தியர், அந்த வெளிநாட்டு பெண்ணிடம் நேரடியாக அவரது செல்போன் எண்ணை கேட்டு தொல்லை செய்த்தது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது. சம்பவத்தின் போது அவரது கணவர் அருகில் இல்லாத சூழ்நிலையில் நடந்த இந்த செயல், பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், வெளிநாட்டு கணவர் அந்த நபரை நேரில் எதிர்கொண்டு, “ஏன் என் மனைவியின் எண்ணை கேட்கிறீர்கள்? இது மிகவும் விசித்திரமானது. யாரையும் இப்படிச் சுற்றி வந்து இரண்டு விநாடியில் நம்பர் கேட்பது மிகவும் தவறு. மீண்டும் இப்படிச் செய்யாதீர்கள்” என்று கண்டித்துள்ளார். அந்த நபர் செயல்பாட்டை “விசித்திரமானது” என்று கூறியதோடு, “நீங்கள் என்ன பைத்தியமா?” என சற்று கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த வீடியோ முதலில் ரெடிட் தளத்தில் பதிவிடப்பட்டது. இது தொடர்பாக நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பையும், நாட்டின் மதிப்பை இத்தகைய செயல்கள் பாதிக்கின்றன என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெண்கள், குறிப்பாக வெளிநாட்டு பெண்கள், பாதுகாப்பாகச் சுற்றி வர முடியுமா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பொது இடங்களில் மரியாதையுடனான நடத்தை அவசியம் என்பதையே இந்த சம்பவம் சுட்டிக் காட்டுகிறது.