சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஒரு தனியார் கிளப் மற்றும் எஸ்.எஸ். பண்ணை வீட்டில், ஐரோப்பா, அமெரிக்கா பாணியில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த ரகசிய நிகழ்ச்சிக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, செல்போன்களுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஒருவருக்கு ரூ.40,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட இந்த விருந்தில், காதல் ஜோடிகளும், தம்பதிகளும் ரூ.1 லட்சம் வரை செலுத்தி பங்கேற்க ஆர்வம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் மும்பை, பெங்களூரைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் கூட ஆர்வத்துடன் பங்கேற்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கான உயர்தர கூட்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த விருந்து, சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர்கள் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றது.

ஆனால், இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை கைது செய்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.