இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மீதான இனவெறி தாக்குதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணத்தின் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் (வயது 20) நேற்று முன் தினம் காலை 8.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற இரண்டு பேர், அந்த இளம்பெண்ணை கடுமையாகத் தாக்கி இருவரும் சேர்ந்து கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், “இங்கிலாந்தை விட்டு வெளியேறி உனது நாட்டிற்கு செல்” என்று அந்த இளம்பெண்ணிடம் அந்த இருவரும் கூறி மிரட்டி தாக்கியுள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஓல்ட்பெரி போலீசார், இந்திய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய அந்த இரண்டு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலும், பாலியல் வன்கொடுமையும் இனவெறி ரீதியில் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.