திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஏலகிரி கிராமம், தடிராமன் வட்டத்தைச் சேர்ந்த சேட்டுவின் மகன் சிவநந்தன் (19), ஊட்டி பகுதியில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பணியாற்றி வந்தார். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், உள்ளூரிலேயே வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சிவநந்தன் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த மாதம், சிறுமியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஸ்வீட் கடையில் இருவரும் சந்தித்து உரையாடியதாக கூறப்படுகிறது.

இதைக் கவனித்த சிறுமியின் குடும்பத்தினர், இளம்பருவத்தில் காதல் தவறு எனக் கருதி, அவர்களது உறவை கைவிட ஆலோசனை வழங்கியதாகத் தெரிகிறது. சிறுமி இன்னும் நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டிய நிலையில் இருப்பதையும், சிவநந்தன் வேலைக்கு சென்று நிலையாக இருக்க வேண்டும் என்பதையும் கூறி, இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ நாளில் சிவநந்தன் தனது செல்போனில், “அம்மா, என்னை மன்னித்துவிடு” என்ற ஸ்டேட்டஸைப் பகிர்ந்துள்ளார். பின்னர் அதிகாலை, வீட்டிற்கு அருகேயுள்ள மரத்தில் சேலையைப் பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார், உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.