தேனி அருகே செல்போன் மற்றும் பணத்தை இழந்த விவகாரத்தில் தாய் கண்டித்ததையடுத்து, பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டது சோகம் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு யோகஸ்ரீ (17), பானுஸ்ரீ என்ற இரு மகள்கள் உள்ளனர். சுரேஷ் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு பிரியா கூலி வேலை செய்து வருகிறார்.

அவரது மூத்த மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 11-ம் தேதி மாலை பிரியா தனது மகளிடம் ரூ.500 பணமும், செல்போனும் கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறிவிட்டு, அருகில் உள்ள உறவினர்  இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றார். சில மணி நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய அவர், மகளிடம் பணமும், செல்போனும் கேட்டபோது, யோகஸ்ரீ சரியான பதில் அளிக்கவில்லை. இதனால், பிரியா மகளை கண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அப்போது யோகஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தார். தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய பிரியா, தனது மகளை தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யோகஸ்ரீயை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், யோகஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக யோகஸ்ரீயின் தாய் பிரியா, தேனி போலீசில் புகார் செய்தார். மேலும்  அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.