பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டமன்றத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் தொலைக்காட்சிகளில் நேரலையாகப் பார்த்த பிறகு, தமிழக மக்களுக்குச் சட்டமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிகமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இதுவரை அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்காமல், தேர்தல் மற்றும் அரசியலில் நேரடித் தொடர்பில்லாமல் இருந்த இளம் தலைமுறையினர் தற்பொழுது இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தாங்கள் மிகவும் விரும்பி, தங்களது வாக்குகளை அளித்துப் பதவியில் அமர்த்திய அமைச்சர்களும், முதலமைச்சரும் சட்டமன்றத்திற்குள் எவ்வாறு செயல்படுகிறார்கள், மக்கள் பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற தங்களது ஆவலை இளைஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து உரிய நேரத்தில், உரியத் தகுந்த நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.