மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட மோதலில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நான்கு ஆண்டுகளாகத் தனித்தனியாக வசித்து வந்த நீலம் குஷ்வாஹா மற்றும் அவரது கணவர் தீன்தயாள் குஷ்வாஹா இடையே, கடந்த ஜூன் 1-ம் தேதி போதையில் வந்த கணவனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தனது குழந்தையை கணவர் துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நீலம், தடியால் தாக்கியதில் தீன்தயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கணவர் இறந்த பிறகு, சுமார் எட்டு மணி நேரம் அவரது உடலுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த நீலம், பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று இறைவனிடம் பத்து நிமிடம் மௌனமாக அமர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்நிலையில் நேராக காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
