மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில், 65 வயது மூதாட்டி சூர்ஜியா பாய் ஜாதவ், காட்டு நரியுடன் 30 நிமிடங்கள் தீரமாகப் போராடி, அதை தனது புடவையால் கயிறு செய்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பதர்வாஸ் காவல் நிலையப் பகுதியில் உள்ள பர்காதி கிராமத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டி, திங்கள்கிழமை கால்நடைகளுக்கு புல் வெட்ட சென்றபோது, பாலம் அருகே திடீரென நரி தாக்கியது.

தாக்குதலில் கால்களில் கடி வாங்கிய சூர்ஜியா, உரத்த கூச்சலிட்டபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை. ஆபத்தான நிலையில், தன் உயிரைக் காக்க, நரியின் வாயை இரு கைகளால் இறுக்கப் பிடித்து, அதன் தாக்குதலை கட்டுப்படுத்தினார்.

நரி மேலும் ஆக்ரோஷமாக கைகளைக் கடிக்க முயன்றபோது, சூர்ஜியா தைரியத்தை வரவழைத்து, நரியின் மேல் அமர்ந்து அதன் தாடைகளை வலுக்கட்டாயமாக பிரித்தார். சுமார் 20 நிமிடப் போராட்டத்திற்கு பிறகு, தனது புடவையை உருவி, அதைக் கயிறாக்கி நரியின் கழுத்தில் இறுக்கி, கழுத்தை நெரித்து கொன்றார்.

சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் ஓடி வந்தபோது, சூர்ஜியா மயக்கமடைந்து, ரத்தக் காயங்களுடன் கிடந்தார். நரி, புடவைக் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது.

உடனடியாக ஆம்புலன்ஸில் பதர்வாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

நள்ளிரவு மயக்கம் தெளிந்ததால்  குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். மேலும் மருத்துவர்கள், அவருக்கு பலத்த காயங்கள் இருப்பதாகவும், சிகிச்சை தொடருவதாகவும் தெரிவித்தனர்.இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.